

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட ஹுமாயூன் கபீர் ஆம் ஜனதா உன்னயன் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் ஏயுஜேயுபி கூட்டணி வைத்தது.
இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ், ஹுமாயூன் கபீர் தொடர்புடைய வீடியோ ஒன்றை வெளியிட்டது.
அதில், ஹுமாயூன் கபீர் பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியைத் தோற்கடிக்க பாஜகவிடம் ரூ. 1,000 கோடி திட்டம் உள்ளதாகவும், அதில் ரூ. 200 கோடி முன்பணமாகப் பெறப்பட்டதாகவும் அவர் கூறுவது போல அதில் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம்களை எளிதில் ஏமாற்றிவிடலாம். அவர்களின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பாஜகவிற்கு உதவலாம் என அவர் பேசுவது போன்ற சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள ஹுமாயூன் கபீர், அந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என கூறியுள்ளார்.
இதையடுத்து, ஹுமாயூன் கபீர் கட்சியுடனான கூட்டணியை அசாதுதீன் ஒவைசி முறித்துக் கொண்டார்.
இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு உதவுவதற்காக அசாதுதீன் ஓவைசியும் மற்றவர்களும் இதுபோன்ற தந்திரங்களைக் கையாளுகிறார்கள் என சிவசேனா கட்சி எம்பியான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.