

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா சுமார் 30.29 கிலோ அளவிலான தங்கத்தை நன்கொடையாக வழங்கினார்.
இந்த தங்கம் கோவிலின் கருவறையில் இருக்கும் துவாரபாலகர் சிலைகள், தூண்கள் மற்றும் கதவு சட்டங்கள் உள்ளிட்டவைகளில் தங்க முலாம் பூசுவதற்காக பயன்படுத்தப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் ஐயப்பன் கோவிலின் முன்னாள் உதவி அர்ச்சகரான உன்னிகிருஷ்ணன் பொட்டி, மங்கி வரும் தங்கமுலாமை புதுப்பித்து தருவதாக முன்வந்தார்.
இதையடுத்து கோவிலில் இருந்த சிலைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற உலோக மின்முலாம் பூச்சு நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தில் கோவிலின் புனித சிலைகள் நிர்வாக அனுமதியின்றி 39 நாட்களாக பல மாநிலங்கள் கடந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்தது.
மேலும் கோவிலின் பழம்பொருட்கள் சென்னை தனியார் ஆலையில் அயோடைடு செயல்முறை மூலம் அசல் தங்கம் வேதியியல் முறையில் பிரித்தெடுத்து திருடப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
சென்னை கொண்டு செல்வதற்கு முன்பு 42.8 கிலோகிராமாக இருந்த சிலைகளின் எடை, 38.25 கிலோவாக குறைந்து, 4.54 கிலோ தங்கம் திருடு போனதாக கூறப்பட்டது.
கடந்த செப்டம்பர் 2025-ஆம் ஆண்டு துவாரபாலக சிலைகளை புனரமைபதற்காக, உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆணையர் இந்த நடவடிக்கையைக் கவனித்து, கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதைத்தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வரலாற்று பதிவுகளை ஆழமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டு, 2025 அக்டோபர் மாதம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் பொட்டி கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து 12 பேர் கைதான நிலையில், கோவில் நிர்வாக அதிகாரி முராரி பாபு நேற்று இரவு உயிரிழந்தார்.
உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட 90 நாள் காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய தவறியதால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சபரிமலை கோவிலில் முன்னரே மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்த போதிலும், பிரபாமண்டலத் தகடுகளையும் மேல் பக்கக் கதவுச் சட்டத் தகட்டையும் பிரிக்க முடியவில்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.
இந்நிலையில் ஜூன் 8 அன்று கூடுதல் மாதிரிகளை சேகரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அறிவியல் பகுப்பாய்விற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டில் அனுமதி வாங்கி ஆய்வு நடத்த உள்ளனர்.