

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் பி.கே. ஹஸ்ரா என்பவர், தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூறினால், ஆலோசனைக் கட்டணத்தில் ரூ.500 தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வைத்து இதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்றுக்கூறி ரூ.500 தள்ளுபடியும் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதற்கு “நான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவன். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பது ஒரு மத ரீதியான முழக்கம் அல்ல; அது ஒரு அரசியல் முழக்கம்.
எனக்கென்று ஒரு அரசியல் கருத்தைக் கொண்டிருக்க எனக்கு முழு உரிமை உண்டு” என தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஒரு நாளைக்கு 40 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதாகவும், அதில் பாதிப் பேருக்கு இலவசமாக ஆலோசனை வழங்குவதாகவும், அப்போது பாகுபாடு இல்லை என்றால், தற்போது மட்டும் இது ஏன் பாகுபாடாகக் கருதப்படுகிறது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து இதற்கு உதாரணமாக மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் பிதான் சந்திர ராயை குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மாணவரான ஹஸ்ரா, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதய சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வருகிறார். மணிப்பால் மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வரும் இவர், தனியாக மருத்துவமனை ஒன்றையும் வைத்துள்ளார்.
தனது இந்த சலுகை தனது சொந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அவர் பணியாற்றும் மருத்துவமனையின் ஆலோசனைகளுக்கு பொருந்தாது என்றும் விளக்கமளித்துள்ளார்.
இவர் இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட ரேடியல் ஆஞ்சியோகிராஃபிகளையும், 2,500-க்கும் மேற்பட்ட கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளார். சமீபத்திய மாதங்களாக தனது ஆலோசனைக் கட்டணத்தை ரூ.2,000-லிருந்து ரூ.1,000-ஆகக் குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.