

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, ஹரியானா மாநில நில மோசடி வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை இன்று நிபந்தனையின்றி திரும்பப் பெற்றுள்ளார்.
ராபர்ட் வதேராவின் 'ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி' நிறுவனம் 2008-ம் ஆண்டு 'ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ்' என்ற நிறுவனத்திடம் இருந்து ₹7.5 கோடிக்கு நிலம் வாங்கியுள்ளது. அதற்காக வதேரா தரப்பில் காசோலை கொடுக்கப்பட்டது.
ஆனால், அந்த ₹7.5 கோடிக்கான காசோலையை அந்த நிறுவனம் வங்கியில் செலுத்திப் பணமாக மாற்றவே இல்லை. அதாவது, வதேரா தரப்பில் இருந்து உண்மையில் அந்த நிறுவனத்திற்குப் பணமே போகவில்லை. பணமே தராமல் நிலத்தின் உரிமை மட்டும் வதேரா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.
பின்னர், 2012-ல் அதே நிலத்தை 'டிஎல்எஃப்' என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு ₹58 கோடிக்கு விற்று பலமடங்கு லாபம் பார்த்துள்ளனர். இதில் பெரிய அளவில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இது தொடர்பான டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்த நிலையில், வதேராவுக்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதால், "ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேரும் மே 16-ம் தேதி (நேற்று முன்தினம்) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்" என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எதிர்த்து ராபர்ட் வதேரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது "நில வழக்குகள் 2008 முதல் 2012 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது. தன் மீது போடப்பட்ட சட்டப்பிரிவுகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012-க்குப் பிறகுதான் சேர்க்கப்பட்டன. பழைய வழக்கிற்கு புது சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது" என வதேரா சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது. வதேரா தரப்பில் பொய் கூறப்படுகிறது. இதனால் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கிற்கு முழுமையாக தயாராகி வரும்படி வதேராவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே வதேரா கடந்த 16-ந்தேதி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றார். இந்த நிலையில் மனுவை நிபந்தனையற்று வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் வதேரா தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி மனு வாபஸ் பெறப்பட்டது.