

டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு, தலைநகரின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் 'டெல்லி மின்சார வாகனக் கொள்கை 2026'ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இக்கொள்கை கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதுடன், மார்ச் 31, 2030 வரை நடைமுறையில் இருக்கும்.
டெல்லியின் வாகனக் கட்டமைப்பில் குறைந்தபட்சம் 30 சதவீதத்தையாவது மின்சார வாகனங்களாக மாற்றுவதே இக்கொள்கையின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் டெல்லியின் ஒட்டுமொத்த காற்று மாசுபாட்டில் 23 சதவீதம் பங்களிக்கும் வாகனப் புகையைக் கணிசமாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இக்கொள்கையின்படி, டெல்லியில் காற்று மாசுபாட்டை முழுமையாக ஒழிக்கப் பல அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் ஜனவரி 1, 2027 முதல் டெல்லியில் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் 'N1' ரக சரக்கு வாகனங்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.
மேலும், ஏப்ரல் 1, 2028 முதல் புதிய பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இருசக்கர வாகனங்களின் பதிவு முற்றிலும் நிறுத்தப்பட்டு, எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்ய தகுதி பெறும். பொதுமக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதை எளிதாக்க, சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இதற்காக பிரத்யேக மானிய இணையதளத்தையும் (evsubsidy.delhi.gov.in) முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு 30,000 ரூபாய் வரையும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வரையும், வணிக ரீதியான எலக்ட்ரிக் சரக்கு வாகனங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரையும் நேரடி மானியம் வழங்கப்படும்.
இதுமட்டுமின்றி, பழைய மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கொண்ட பழைய வாகனங்களை அழித்துவிட்டு, புதிய மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு 10,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கூடுதல் ஸ்கிராப்பேஜ் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
30 லட்சம் ரூபாய்க்குக் குறைவான விலையுள்ள அனைத்து தூய மின்சார கார்களுக்கும் ஆயுட்கால சாலை வரி மற்றும் பதிவு கட்டண விலக்கு 100 சதவீதம் அளிக்கப்படுகிறது.
தலைநகரில் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க நகர் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட பொது மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், பள்ளிப் பேருந்துகளைப் படிப்படியாக மின்சாரப் பேருந்துகளாக மாற்றும் பொறுப்பு கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக டெல்லி அரசு மேற்கொண்ட தூசி கட்டுப்பாடு மற்றும் மரக்கன்றுகள் நடும் திட்டங்களுடன், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த விரிவான மின்சார வாகனக் கொள்கையும் இணைந்து டெல்லியை ஒரு தூய்மையான, மாசுபாடற்ற பசுமைத் தலைநகராக மாற்றும் என முதல்வர் ரேகா குப்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.