

ராஜஸ்தானில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு 5 நாட்களில் 30க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் உள்ள ஊரை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த வாரம் தனது வீட்டிலிருந்து திடீரென மாயமாகியுள்ளார்.
பெற்றோர் புகாரின் பேரில் போலீசார் சிறுமியைத் தேடி வந்த நிலையில், அப்பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத ஓட்டல்களில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்து கிடைத்த தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை அமைத்து ஓட்டல் ஒன்றில் நடத்திய சோதனையில் சிறுமி மீட்கப்பட்டாள்.
இந்த வழக்கில் போலீசார் பதிந்த முதல் தகவல் அறிக்கையின்படி,
அன்றைய தினம் ஒரு ரிக்ஷா தொழிலாளி சிறுமியை கடத்திச் சென்று, கங்காநகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஓட்டல் ஒன்றின் உரிமையாளருக்கு விற்றுள்ளான்.
சிறுமியைத் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஓட்டல் உரிமையாளர், அங்குள்ள இதர சில ஓட்டல் உரிமையாளர்களுடனும் இணைந்து அச்சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
5 நாட்களுக்கு இந்த சித்ரவதை தொடர்ந்துள்ளது. இறுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சிறுமி மீட்கப்பட்ட நிலையில் அவளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரிஷா ஓட்டுநர் மற்றும் சம்பந்தப்பட்ட பல ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாருக்கு சிறுமி அளித்த வாக்குமூலத்தில்
"தொடர்ச்சியாகவும், அடுத்தடுத்துப் பலராலும் நடத்தப்பட்ட வன்கொடுமையால் நான் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான வலியை அனுபவித்தேன். நான் கதறி அழுதபோதெல்லாம், அவர்கள் என்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி மதுவைக் குடிக்க வைத்தனர்." என தெரிவித்திருக்கிறாள்.
ஸ்ரீகங்காநகர் மாவட்டம் என்பது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம் அல்ல. இருப்பினும், இந்த மாவட்ட எல்லைக்குள் முறையான அனுமதியின்றி 150க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் விதிகளை மீறிச் செயல்பட்டு வருகின்றன.
சட்டவிரோத ஓட்டல்களை மூடக் கோரியும், சிறுமியை சீரழித்தவர்களுக்கு மரணதண்டனை பெற்றுத் தர கோரியும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.