

புதுடெல்லி:
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் பயங்கரவாதிகளின் பல முகாம்கள் அழிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு தெரிவித்ததற்காக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ தாக்குதல் பற்றி பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தது குற்றம். இதற்கு அனுமதி கொடுத்தது யார்? இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானப்படைக்கு எத்தனை விமானங்கள் இழப்பு ஏற்பட்டது என பதிவிட்டுள்ளார். மேலும், மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்தார்.
ஆனால், ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு மந்திரி ஜெய்சங்கர் தகவல் தெரிவித்தார் என வெளியான செய்தியை பத்திரிகை தகவல் அலுவலகம் மறுத்துள்ளது. பி.ஐ.பி.யின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், மந்திரி ஜெய்சங்கர் அதுபோல் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை. அவர் தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாக தெரிவித்துள்ளது.