

இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் பொது போக்குவரத்திற்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பஸ், ரெயில், மெட்ரோ ரெயில் என வசதிகள் இருந்தாலும் மக்களால் பெரிதும் விரும்பப்படுவது விமான போக்குவரத்து. அம்மாதிரியான மக்களை கவர்வதற்கு விமான நிறுவனங்கள் போட்டி போட்டு தொடங்கப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்படுகிறது.
மக்களால் பெரிதும் விரும்பப்படும் விமான நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.
விமானப் பயண அனுபவம், வாடிக்கையாளர் சேவை, வசதி மற்றும் பணத்திற்கான மதிப்பு போன்ற முக்கிய காரணிகளின் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் முதலிடத்தை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பிடித்துள்ளது. தரமான உணவு, நவீன விமான அறைகள் மற்றும் பயணிகளின் திருப்தியில் வலுவான கவனம் ஆகியவற்றை வழங்கியதன் மூலம், கத்தார் ஏர்வேஸ் முதலிடம் பிடித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தே பசிபிக் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. இவை சேவை தரம் மற்றும் பயணிகளின் வசதியில் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன. இவ்விரு விமான நிறுவனங்களும் அவற்றின் சீரான சேவை, சிறந்த இருக்கை அனுபவம் மற்றும் ஒட்டுமொத்த நம்பகத்தன்மைக்காக பாராட்டப்பட்டன. இதனால், நீண்ட தூர பயணங்களுக்கு இவை பிரபலமான தேர்வுகளாக விளங்குகின்றன.
இதனிடையே, இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய விமான நிறுவனங்கள் இடம்பெறவில்லை. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகியவை தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, சேவைகளை மேம்படுத்தி வந்தாலும், ஒட்டுமொத்த பயணிகளின் அனுபவத்தில் அவை இன்னும் உலகளாவிய விமான நிறுவனங்களை விட பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.