பிரபல பஞ்சாபி நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்

ஷாருக்கானோடு இணைந்து பதான் படத்தில் நடித்துள்ளார்.வரீந்தர் சிங் சைவ உணவை சாப்பிட்டே உடற்பயிற்சிகளை செய்து வந்தார்.
பிரபல பஞ்சாபி நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் வரீந்தர் சிங் குமான்.

இவர் பஞ்சாபின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் சிறந்த உடற்பயிற்சி நிபுணரும் ஆவார். சொந்தமாக உடற்பயிற்சி கூடம் வைத்து உடற்பயிற்சி நிபுணராக வாழ்க்கையை தொடங்கிய இவர் கடந்த 2009-ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்றார், மிஸ்டர் ஆசியா போட்டியில் 2-ம் இடமும் பிடித்தார்.

2013-ம் ஆண்டு அர்னால்ட் பாடிபில்டிங் போட்டிக்காக ஸ்பெயின் சென்று ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்தார். அர்னால்ட் அவர் உடலை பார்த்து வியந்து அவரை பாராட்டி பேசினார். அர்னால்டின் அந்த பாராட்டு வரீந்தர் சிங்கை இந்தியாவின் கொண்டாடப்படும் நட்சத்திரமாக ஆக்கியது. அதன் பிறகு இந்தியாவில் அவருக்கு படவாய்ப்புகள் வரத்தொடங்கின.

2012-ம் ஆண்டு பஞ்சாபி மொழியில் கபடி ஒன்ஸ் அகைய்ன் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர் 2014-ம் ஆண்டு இந்தி படங்களில் அறிமுகமானார். அதன் பிறகே பிரபல நட்சத்திரமானார்.

ஷாருக்கானோடு இணைந்து பதான் படத்தில் நடித்துள்ளார். இறுதியாக அவர் சல்மான்கான், கத்ரீனா கைப்புடன் இணைந்து நடித்த டைகர் 3 படம் 2023-ம் ஆண்டு வெளியானது.

உடற்பயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் அசைவ உணவே சாப்பிடுவார்கள். ஆனால் வரீந்தர் சிங் சைவ உணவை சாப்பிட்டே உடற்பயிற்சிகளை செய்து வந்தார். சைவ உணவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிவந்தார்.

இந்த நிலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவரது கையில் (பைசெப்) சிறு காயம் ஏற்பட்டது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அறுவை சிசிச்சை செய்து கொள்ள அமிர்தசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இருந்த நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com