

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தும் மத்திய அரசின் முடிவு, முற்றிலும் அவசியமான நடவடிக்கை என்று மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே முதல் விலை ஏற்றம் என்றும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மிகப்பெரிய விலை உயர்வு இருந்தபோதிலும், இந்தியாவில் விலை உயர்வு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் எரிபொருள் விலைகள் உயர்ந்தபோது, இந்தியா அதை எதிர்த்துத் தனித்து நின்றது.
பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 20% முதல் 100% வரை உயர்ந்தபோது, இந்தியாவில் பெட்ரோல் 3.2% மற்றும் டீசல் 3.4% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகெங்கிலும் உள்ள முக்கிய நாடுகளில் எரிபொருள் விலைகள் குறித்த பட்டியலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சுத்திகரிப்பு நிலையங்களின் இயக்குநர் அரவிந்த் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய எண்ணெய் நிறுவனங்களும் சுத்திகரிப்பு நிலையங்களும் 24 மணி நேரமும் 100 சதவீதத்திற்கும் அதிகமான திறனில் இயங்கி வருகின்றன.
எனவே, நாட்டில் உள்ள எந்தவொரு சில்லறை விற்பனை நிலையத்திலும் எரிபொருள் பற்றாக்குறையோ அல்லது தட்டுப்பாடோ ஏற்படாது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்று கூறினார்.