என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
    X

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

    • மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப்பின் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
    • பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முந்தைய மத்திய அரசுகள் பலமுறை முயன்றன. இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை.

    ஆனால் தற்போதைய மத்திய அரசு இந்த மசோதா நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டியது. இதற்காக சமீபத்தில் நடந்த பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    அரசியல் சாசன திருத்த மசோதாவாக கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப்பின் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அதேநேரம் இந்த மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்க வகை செய்ய வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதைப்போல மகளிர் இடஒதுக்கீட்டை தற்போதே அமல்படுத்தவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டு உள்ளன.

    இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்து உள்ளார். இதை மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு ஒன்றில் வெளியிட்டு இருக்கிறது.

    இதன் மூலம் இந்த மசோதா தற்போது சட்டமாகி இருக்கிறது.

    அதன் விதியின்படி, அதிகாரபூர்வ அரசிதழில் மத்திய அரசு வெளியிடும் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    Next Story
    ×