search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்கள் தொடங்கப்படும்: பிரகலாத் ஜோஷி
    X

    அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்கள் தொடங்கப்படும்: பிரகலாத் ஜோஷி

    • பொருளாதார வளர்ச்சியில் ரெயில்வே துறையின் பங்கு முக்கியமானது.
    • வந்தேபாரத் ரெயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

    பெங்களூரு :

    ரெயில்வே துறை சார்பில் நேற்று பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்கான விழா தார்வார் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது.

    விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி சுரங்கத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த ரெயிலில் கவர்னர் மற்றும் பிரகலாத்ஜோஷி ஆகியோர் பயணம் செய்தனர். இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:-

    நாடு முழுவதும் ரெயில்வே துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீனமயமாக்கல் பணிகளில் ரெயில்வே துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் ரெயில்வே துறை நாட்டின் போக்குவரத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்வதுடன் நாட்டை ஒருங்கிணைக்கிறது. இந்தியா, ரெயில்வே தொடர்பு வசதிகளில் உலகின் 4-வது பெரிய நாடாக விளங்குகிறது.

    நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ரெயில்வே துறையின் பங்கு முக்கியமானது. மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறையின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ரூ.47 ஆயிரத்து 346 கோடி மதிப்பீட்டிலான ரெயில்வே உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதில் கர்நாடகத்திற்கு ரூ.7 ஆயிரத்து 561 கோடி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 55 ரெயில் நிலையங்களை உலக தரத்திற்கு தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ள வந்தேபாரத் ரெயில் தென் கர்நாடகம், வட கர்நாடகத்தை ஒருங்கிணைக்கிறது. வந்தேபாரத் ரெயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இது நமது நாட்டின் கவுரவத்தை உயர்த்துவதாக உள்ளது.

    இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.

    அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேசியதாவது:-

    பெங்களூரு-தார்வார் இடையே அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று வட கர்நாடக மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை தற்போது வந்தேபாரத் ரெயில் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த ரெயிலை பெலகாவி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெலகாவி பாதையில் இரட்டை ரெயில் பாதை, மின்மயம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. அந்த பணிகள் நிறைவடைந்த பிறகு இந்த ரெயிலை பெலகாவி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் இதுவரை 23 வந்தேபாரத் ரெயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்களின் சேவை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் தார்வாரில் இருந்து புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரெயில் புறப்படும் இடம் பெங்களூரு. அதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு பிரகலாத்ஜோஷி பேசினார்.

    Next Story
    ×