மூன்றாம் பாலினத்தவர் சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்குகள்: உயர் நீதிமன்றங்களின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

புதிய சட்டத் திருத்தம் மூன்றாம் பாலினத்தவரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.
Petitions Against Transgender Rights Amendment Act
Published on

மத்திய அரசு கொண்டு வந்த "திருநங்கைகள் திருத்தச் சட்டம், 2026"-இன் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மையை எதிர்த்து பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்குவதைத் தவிர்க்கும் பொருட்டு, உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இன்று நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஒரே சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், முரண்பட்ட கருத்துக்களைத் தவிர்க்க இவை அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி, ஒரே இடமாக விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், 2014-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'நல்சா' தீர்ப்பு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வால் வழங்கப்பட்டதால், இந்த புதிய திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புதிய சட்டத் திருத்தம் மூன்றாம் பாலினத்தவரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி சமூக ஆர்வலர்களும் மூன்றாம் பாலின அமைப்பினரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

2014 'நல்சா' தீர்ப்பின்படி, ஒருவர் தன்னை எந்த பாலினமாக உணர்கிறாரோ, அதை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது அவரது அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், இந்த 2026 திருத்தச் சட்டம் அந்த உரிமையை நீக்குகிறது. புதிய சட்டத்தின்படி, திருநங்கை என்ற அடையாளச் சான்றிதழைப் பெற மருத்துவக் குழுவின் பரிசோதனை மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தங்களின் கண்ணியத்திற்கும் தனிமனித சுதந்திரத்திற்கும் எதிரானது என மனுதாரர்கள் வாதிடுகின்றனர். புதிய சட்டத்தில் உள்ள சில கடுமையான பிரிவுகள், தற்போது ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் அபாயத்தைக் கொண்டிருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உள்ள அரசியலமைப்புச் சட்டக் கேள்விகள் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது என்று தெரிவித்தது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கான நலத்திட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், அவர்களின் சுய அடையாள உரிமையைப் பாதுகாப்பதற்கும் இடையே உள்ள சமநிலையை நீதிமன்றம் கவனமாக பரிசீலிக்கும் என்றும் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்துள்ளார். தற்போது உயர் நீதிமன்றங்களின் விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த சட்டத் திருத்தம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றமே நேரடியாக விசாரித்து இறுதித் தீர்ப்பை வழங்கவுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com