ராகுல் உள்பட 7 எம்.பி.க்களுக்கு மாம்பழம் அனுப்பிய பாகிஸ்தான் தூதரகம்: மத்திய மந்திரி குற்றச்சாட்டு

பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்கு கூட மாம்பழம் அனுப்பி வைக்க வில்லை.மாம்பழம் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் உள்பட 7 எம்.பி.க்களுக்கு மாம்பழம் அனுப்பிய பாகிஸ்தான் தூதரகம்: மத்திய மந்திரி குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட 7 எம்.பி.க்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் மாம்பழம் அனுப்பி வைத்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் நட்புறவை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் எம்.பி.க்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

சமீபத்தில் பதவி விலகிய வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக்ஹசீனா தான் பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தவறாமல் மாம்பழம் அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் எம்.பி.க்கள் கபில் சிபல், சசிதரூர், சமாஜ்வாடியை சேர்ந்த மொஹிப்புல்லா நத்வி, ஜியா உர் ரஹ்மான் பார்க், ராம்பூர் இக்ரா ஹசன், காஜிபூர் அப்சல் அன்சாரி ஆகிய 7 பேருக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்கு கூட மாம்பழம் அனுப்பி வைக்க வில்லை.

இதுகுறித்து மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

ரேபரேலியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாகிஸ்தானுடன் 'நபக்' (தூய்மையற்ற) தொடர்பு இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து வரும் மாம்பழங்கள் தனக்கு பிடிக்காது என்று சில காலத்திற்கு முன்பு ராகுல் காந்தி கூறினார்.

பாகிஸ்தான் தூதரகம் தற்போது ராகுல்காந்திக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளது. அவர் விரும்பும் மற்ற விஷயங்களை அவர் சொல்ல வேண்டும் என்றார்.

இதேபோல் பா.ஜ.க. எம்.பி. அனுராக்தாக்கூர் கூறியுள்ள குற்றச்சாட்டில், இதயம் இருக்கும் இடத்தில் இருந்து மாம்பழங்களை பெறுகிறார்கள். அவருக்கு (ராகுல்காந்தி) உத்தர பிரதேசத்தின் மாம்பழங்கள் பிடிக்காது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வரும் மாம்பழங்களால் அவர் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது என்றார்.

7 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் பாகிஸ்தான் தூதரகம் ஏன் மாம்பழம் அனுப்புகிறது என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான அமித்மால்வியா கேள்வி கேட்டுள்ளார்.

பா.ஜ.க. மந்திரி, எம்.பி.க்கள் குற்றச்சாட்டால் மாம்பழம் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com