search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒடிசா மந்திரி சுட்டுக்கொல்லப்பட்டதில் தொடர்ந்து நீடிக்கும் மர்ம முடிச்சுகள்- விசாரணை நடத்துபவர்கள் கடும் திணறல்
    X

    ஒடிசா மந்திரி சுட்டுக்கொல்லப்பட்டதில் தொடர்ந்து நீடிக்கும் மர்ம முடிச்சுகள்- விசாரணை நடத்துபவர்கள் கடும் திணறல்

    • கொல்லப்பட்ட மந்திரி நபா கிஷோர் தாஸ் ஒடிசாவில் 2-வது பணக்கார எம்.எல்.ஏ.வாக வலம் வந்தவர் ஆவார்.
    • ஒடிசா மந்திரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்களில் மர்ம முடிச்சுகள் நிலவுகிறது.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில சுகாதார மந்திரி நபா கிஷோர் தாஸ் நேற்று அரசு விழாவில் கலந்து கொள்ள சென்ற போது பாதுகாப்புக்கு வந்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணதாஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணதாசை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை ஒடிசா போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    கொலையாளி கோபால கிருஷ்ணதாஸ் மனநல பாதிப்புக்காக சுமார் 8 ஆண்டுகள் சிகிச்சை எடுத்தவர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எளிதில் கோபப்படும் தன்மை கொண்டவராக சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணதாஸ் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கடந்த சில மாதங்களாக அவர் கோபத்தை குறைத்து கொள்வதற்கான மாத்திரை சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. என்றாலும் மந்திரியை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் அவரது பின்னணியில் யாராவது இருக்கிறார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கொல்லப்பட்ட மந்திரி நபா கிஷோர் தாஸ் ஒடிசாவில் 2-வது பணக்கார எம்.எல்.ஏ.வாக வலம் வந்தவர் ஆவார். 3 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள அவர் தனக்கு ரூ.34 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். 70- க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வைத்துள்ள அவர் அவற்றை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

    மேலும் சுரங்க தொழிலிலும் அவர் ஈடுபட்டு இருந்தார். எனவே தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ஒடிசா போலீசார் இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

    ஒடிசா மந்திரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்களில் மர்ம முடிச்சுகள் நிலவுகிறது.

    Next Story
    ×