

பெண் பயணிகளின் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், வடக்கு ரெயில்வே மற்றும் உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான இண்டஸ் டவர்ஸ் ஆகிய இரண்டும் கைகோர்த்துள்ளன.
இவர்களின் கூட்டு முயற்சியால், 'நாரி சம்மான்' என்ற சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், 175 ரெயில் நிலையங்களில் மொத்தம் 500 சானிட்டரி நேப்கின் வழங்கும் இயந்திரங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள் மற்றும் சிறப்புகள்..
ரெயில் நிலையங்களுக்கு வரும் லட்சக்கணக்கான பெண் பயணிகள் மற்றும் மாணவிகள் இந்த வசதியை எந்த நேரமும் முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் 'இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்' தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால் எந்த இயந்திரத்திலாவது நேப்கின் தீர்ந்து போனால், அது குறித்த தகவல் உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுவிடும். இதனால் உடனுக்குடன் நேப்கின்கள் மீண்டும் நிரப்பப்படும்.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 3 கோடி சானிட்டரி நேப்கின்கள் பெண்களுக்கு தடையின்றி வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டத்துடன் இணைப்பு..
இந்த 'நாரி சம்மான்' திட்டமானது, இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின் முதன்மை சிஎஸ்ஆர் முன்முயற்சியான 'பிரகதி'-யின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இது மத்திய அரசின் 'தேசிய சுகாதார மிஷன்' கீழ் செயல்படும் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
அதிகாரிகளின் கருத்து..
இதுகுறித்து வடக்கு ரெயில்வே தரப்பில் கூறுகையில், "இந்திய ரெயில்வேயை தினசரி லட்சக்கணக்கான பெண்கள் நம்பியுள்ளனர். அவர்களின் சௌகரியம் மற்றும் கண்ணியத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.
இண்டஸ் டவர்ஸ் உடனான இந்த கூட்டணி பொது இடங்களை பெண்களுக்கானதாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகளில் இந்த வசதி?
வடக்கு ரெயில்வே எல்லைக்குட்பட்ட வட மாநிலங்களில் உள்ள 175 முக்கிய ரெயில் நிலையங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி, பிரோஸ்பூர், அம்பாலா, மொராதாபாத், லக்னோ ஆகிய இடங்களில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.