

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ட்விஷா ஷர்மா (33 வயது). டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் 2012 இல் மிஸ் புனே அழகிப் பட்டம் பெற்றவர் ஆவார்.
ட்விஷா ஷர்மாவிற்கு, கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு டேட்டிங் செயலி மூலமாக சமர்த் சிங் என்ற வழக்கறிஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் கடந்த 2025 டிசம்பரில் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு ட்விஷா போபாலில் உள்ள தனது கணவர், மாமனார் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதியான மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மே 12 அன்று வீட்டில் பெல்ட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ட்விஷா குடும்பத்தினர் அளித்துள்ள புகாரில், ட்விஷாவின் கணவர் சமர்த் சிங், மாமியார் கிரிபாலா சிங் மற்றும் மாமனார் ஆகியோர் நீண்ட நாட்களாக ட்விஷாவை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளனர்.
போபாலில் இருக்கப் பிடிக்காமல், ட்விஷா அங்கிருந்து வெளியேறி நொய்டாவிற்கு திரும்ப விரும்பியுள்ளார்.
உயிரிழப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை அவர் தனது குடும்பத்தினருடன் போனில் தொடர்பில் இருந்துள்ளார்.
மேலும் தனது நெருங்கிய தோழி மீனாட்சிக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான செய்தியை அனுப்பியுள்ளார். அதில், "நான் மாட்டிக்கொண்டேன். ஆனால் நீ மட்டும் மாட்டிக்கொள்ளாதே.
என்னால் இப்போது அதிகமாகப் பேச முடியாது. நேரம் வரும்போது நானே உன்னை அழைக்கிறேன்" என்று எழுதியுள்ளார்.
இதற்கு மத்தியில் ட்விஷாவின் மாமியார் ஓய்வு பெற்ற நீதிபதி என்பதால் விசாரணையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முயல்வதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனால் ட்விஷாவிற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரிலும் ட்விஷாவின் உறவினர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த ட்விஷாவின் பிரேத பரிசோதனையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பெல்ட்டை, பிரேத பரிசோதனையின் போது மருத்துவர்களுக்கு காவல்துறை வழங்கவில்லை என்று போபால் எய்ம்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே வீட்டின் மாடியில் இருந்து ட்விஷா சர்மா உடலை மற்ற இரு ஆண்களுடன் கணவன் தூக்கி வருவது பதிவாகியுள்ளது. அவர் ட்விஷாவுக்கு சிபிஆர் முதலுதவி செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வீடியோவும் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளன.
மறுபுறம், அவரது அத்தையும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங், ட்விஷா மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் போதைக்கு அடிமையானவர் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை மறுத்துள்ளது.
உயிரிழந்த ட்விஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமர்த் சிங், மாமியார் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் மற்றும் மாமனார் ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சர்ச்சையை தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.