மதத்தை கடைப்பிடிப்பதற்காக யாரும் பள்ளிக்கு வரக்கூடாது- கர்நாடக உள்துறை மந்திரி அறிவுறுத்தல்

முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள் காவி உடை அணிந்துகொண்டு வந்தனர்.
கர்நாடக மந்திரி அரக ஞானேந்திரா
கர்நாடக மந்திரி அரக ஞானேந்திரா
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை, கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. இதேபோன்று இன்று குந்தாப்பூர் பியு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள், நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று 100க்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள் காவி உடை அணிந்துகொண்டு வந்தனர். 

பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களில் மதத்தை வெளிப்படுத்தும் விதமான உடைகளை அணிந்து வரக்கூடாது என கர்நாடக மாநில கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். 

இதுபற்றி கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அனைத்து மதத்தைச் சேர்ந்த குழந்தைகளும் ஒன்றாகக் கற்க வேண்டிய இடம் பள்ளிகள். நாம் வேறு வேறு இல்லை, அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். மக்கள் தங்கள் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கவும் பிரார்த்தனை செய்யவும் தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கோவில்கள் போன்ற இடங்கள் உள்ளன. அதே நேரத்தில் பள்ளிகளில் குழந்தைகள் தேசிய ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான சூழ்நிலை இருக்க வேண்டும்.

இந்த கோணத்தில் அனைவரும் சிந்திக்கவேண்டும். வேறுவிதமாக நினைக்கும் மத அமைப்புகளைக் கண்காணிக்கும்படி காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்கள் அல்லது குழிபறிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவி உடை அணிந்து வந்தது பற்றி கேட்டதற்கு, மதத்தை கடைப்பிடிப்பதற்காக யாரும் பள்ளிக்கு வரக்கூடாது என்று அமைச்சர் அறிவுறுத்தினார். 

பாரத மாதாவின் குழந்தைகளாக அனைவரும் படிப்பதற்காக பள்ளிகளுக்கு வர வேண்டும், பள்ளி வளாகத்தில் யாரும் ஹிஜாப் அல்லது காவி சால்வை அணியக்கூடாது, பள்ளியின் விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ஞானேந்திரா வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com