

கடந்த மாதம், பத்திரிகையாளர் ஒருவரை காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்து, "உடல் ரீதியான சித்ரவதைக்கு" உள்ளாக்கியதாக வந்த தகவல்கள் குறித்து, குஜராத் காவல்துறை தலைவருக்கு (DGP) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தெரிவித்தது.
அந்த பத்திரிகையாளர் ஆடையின்றி நிர்வாணமாக்கப்பட்டு, தலைகீழாக தொங்கவிடப்பட்டு, உடல் ரீதியான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும்; இதன் விளைவாக அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும், ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
மார்ச் 22-ஆம் தேதியன்று, குஜராத்தின் ராஜ்கோட் குற்றப்பிரிவு காவல் துறையினரால் ஒரு பத்திரிகையாளர் "சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டார்" என்று வெளியான ஒரு ஊடக செய்தியை, ஆணையம் "தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாக" மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது என்று கூறி, ராஜ்கோட் அரசு மருத்துவமனை ஊழியர்களை காவல் துறையினர் "மிரட்ட முயன்றதாக" தகவல்கள் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் மீது "பொய்யான குற்ற வழக்குகள்" பதிவு செய்யப்படும் என்றும், அவரது வீடு இடிக்கப்படும் என்றும் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக, அந்த செய்திகளை மேற்கோள் காட்டி NHRC கூறியுள்ளது.
ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது அந்த பத்திரிகையாளரின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஒரு தீவிரமான பிரச்சினையை எழுப்புவதாக ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
எனவே, குஜராத் டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஆணையம், இந்த விசாரணை தற்போது எந்த நிலையில் உள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை குறித்த விவரங்கள் உட்பட, விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.
மார்ச் 29 அன்று வெளியான அந்த செய்தி அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஒரு இணைய ஊடகத்தை நடத்தி வருகிறார். "காவல் துறையினரின் சித்திரவதையால் அவருக்கு ஏற்பட்ட காயங்கள்" குறித்த விரிவான விவரங்களையும் அந்த செய்தி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக ஆணையம் கூறியது.
பாதிக்கப்பட்டவர் மார்ச் 23 அன்று ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.