பைலட்டான நியூட்டன்: ஒடிசா பாடப்புத்தகங்களில் 1600க்கும் மேற்பட்ட பிழைகள் கண்டுபிடிப்பு!

அதிகபட்சமாக எட்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் 705 பிழைகள் உள்ளன.
பைலட்டான நியூட்டன்: ஒடிசா பாடப்புத்தகங்களில் 1600க்கும் மேற்பட்ட பிழைகள் கண்டுபிடிப்பு!
Published on

புதிதாக இந்தியாவில் எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில், இயற்பியலின் தந்தை ‘சர் ஐசக் நியூட்டனுக்கு’, மிகச்சிறந்த விமானி என்றப் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது; கர்நாடக சட்டமன்றம், ஒடிசா சட்டமன்றமாக மாற்றப்பட்டுள்ளது; ஹம்பி கோயில் வளாகம், கோனார்க் சூரியக் கோயில் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது என்னப் புத்தகமாக இருக்கும் என அனைவருக்கும் சந்தேகம் எழுந்திருக்கும். அது தனிப் புத்தகம் எதுவும் இல்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் ஒடிசா பாடத்திட்டக் கட்டமைப்பு 2025 ஆகியவற்றின் கீழ், நடப்புக் கல்வியாண்டிற்காக பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாடப்புத்தகம்தான்.

ஒடிசாவில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை கொடுக்கப்பட்டுள்ள புதியப் பாடப்புத்தகங்களில் கண்டறியப்பட்டுள்ள 1,678 பிழைகளில் மேற்குறிப்பிட்டவை அடங்கும். அதிகபட்சமாக 8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களில் மட்டும் 705 பிழைகளும், 7-ஆம் வகுப்பில் 387 பிழைகளும், 6-ஆம் வகுப்பில் 289 பிழைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தால் இந்தப் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்களை அச்சிடக் கிடைத்த குறைவான கால அவகாசமே இதற்கு காரணம் என மாநில கல்வி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் கணிதம், அறிவியல், புவியியல், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் உருது உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களில் பிழைகள் கண்டறியப்பட்டுள்ளது வெறும் கால அவகாசத்தால் ஏற்பட்ட பிழைப் போன்று தெரியவில்லை.

மேலும் இதை வெறும் அச்சுப்பிழையாக மட்டும் பார்க்கமுடியாது, ஒடிசாவின் கல்வி தரத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உண்மை திரிபு, அறிவியல் தவறுகள், புவியியலை தவறாக காட்டுவது போன்றவை மாணவர்களை தவறாக வழிநடத்தக்கூடியவை.

மேலும் மீண்டும் பாடப்புத்தகங்களை அச்சிட ஆறுமாத காலம் ஆகும் என்பதால், அதேப் புத்தகங்களை கொண்டே ஆசிரியர் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அதிலுள்ள பிழைகளை ஆசிரியர்கள் திருத்திக் கொள்ள கூறப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில அரசின் இந்த செயல்பாட்டை அலட்சியம் என்பதா? அல்லது மெத்தனப்போக்கு எனக்கூறுவதா?

X

Maalai Malar
www.maalaimalar.com