

தெற்கு டெல்லியின் புஷ்ப் விஹாரை சேர்ந்தவர் ஆக்ரிதி(வயது 28). சத்தார்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் அரஸ்து சிக்கா என்ற வாலிபரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து, இருவரும் கடந்த ஏப்ரல் 24-ந் தேதி திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஆக்ரிதி, லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் படுகாயத்துடன் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆக்ரிதியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆக்ரிதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஆக்ரிதியின் கணவர் குடும்பத்தினர் கூறி உள்ளளர். ஆக்ரிதி இறந்து கிடந்த இடம் அவரது கணவர் வீட்டில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையில் அவர் ஏன் அங்கு சென்றார்? என்பது குறித்து கணவர் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது சரியாக பதில் கூறவில்லை. இதனால் ஆக்ரிதி சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.
இதற்கிடையே, ஆக்ரிதியிடம் வரதட்சணை கொடுமை காரணமாக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆக்ரிதியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆக்ரிதிக்கு திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே அவரது கணவர் குடும்பத்தினர் ஆக்ரிதியை வரதட்சணை கேட்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடூரமாக தாக்கி துன்புறுத்தி வந்தனர். குறிப்பாக ஆக்ரிதியின் கணவர் அரஸ்துவும் அவரது குடும்பத்தினரும் ரூ. 20 லட்சம் வரதட்சணை கேட்டு அக்ரிதியை தொடர்ந்து துன்புறுத்தி மிரட்டி வந்தனர். அப்போது அரஸ்து உன்னை கொன்று விடுவேன் என ஆக்ரிதியை அடிக்கடி மிரட்டி வந்தார்.
சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பும் ஆக்ரிதிக்கும், அவரது கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக ஆக்ரிதி கூறினர். சம்பவத்தன்று மாலை 6 மணிக்கு கூட ஆக்ரிதி அவரது தாயாரிடம் போனில் பேசினார். அப்போது அவர் இயல்பாகவே பேசி உள்ளார். ஆனால் அடுத்த 2 மணி நேரத்தில் ஆக்ரிதியை காணவில்லை என அவரது கணவர் குடும்பத்தினர் தகவல் கூறினர். அடுத்த சிறிது நேரத்தில் அவர் மாடியில் இருந்து விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. எனவே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்றனர்.
மேலும், சம்பவத்தன்று அலுவலகத்தில் ஆக்ரிதி தனது சக ஊழியர்களுக்கு ஒரு சிறிய விருந்து வைத்திருந்தார். அவர் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை. ஆக்ரிதி மனரீதியாக மிகவும் வலிமையானவர். கொலையை மறைப்பதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டது போல சித்திரிக்கப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
இதைத்தொடர்ந்த ஆக்ரிதியின் மர்மச்சாவு தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ஆக்ரிதியின் குடும்பத்தினர் மற்றும் அவரது கணவர் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வரும் டெல்லி போலீசார், அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.