தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாட்டம்: பிரதமர் மோடி-அமித்ஷா வாழ்த்து!

"முகமூடிக்கு பின்னால்: மருத்துவர்களைக் குணப்படுத்துவது யார்?" என்ற கருத்து மையக்கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
National Doctors' Day Celebrations
Published on

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதில் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, இரக்கம் மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறப்பு மற்றும் இறப்பு நினைவேந்தலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி இத்தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மருத்துவர்கள் தின மையக்கருப்பொருளாக “Behind the Mask: Who Heals the Healers?” (முகமூடிக்கு பின்னால்: மருத்துவர்களைக் குணப்படுத்துவது யார்?) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களின் உயிரைக் காக்கத் தங்களை அர்ப்பணிக்கும் மருத்துவர்களின் மன நலம், உணர்வு ரீதியான மற்றும் உடல் ரீதியான நல்வாழ்வை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை இந்தத் கருப்பொருள் விரிவாக வலியுறுத்துகிறது.

இத்தருணத்தில் நாட்டின் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாகவும், மருத்துவ இடங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வளர்ச்சி வளரும் மருத்துவர்களுக்குப் பெரும் வாய்ப்புகளை உருவாக்குவதோடு, நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் தரமான மருத்துவம் சென்றடைவதை உறுதி செய்யும் என்றும், வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கி பயணிப்பதில் மருத்துவர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் பிரதமர் பாராட்டியுள்ளார்.

இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மருத்துவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதிலும், நோய் குணமாகப் பாடுபடுவதிலும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது என்று அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பல்வேறு மாநிலங்களின் தலைவர்களும் மருத்துவர்களின் அயராத உழைப்பிற்கும், தியாகத்திற்கும் தங்களது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com