

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனத்தில் ஊழியர்களை கட்டுப்படுத்தி மதமாற்றம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அங்கு பணிபுரியும் ஒரு பெண், தனது சக ஊழியரான டேனிஷ் ஷேக், திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் பாலியல் உறவு கொண்டதாகவும், ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது தெரியவந்தது எனவும் புகார் அளித்துள்ளார்.
மேலும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த டேனிஷ் ஷேக் உடைய சகோதரி நீடா கான் தன்னை மதமாற்ற முயற்சித்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு (SIT) அமைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தொடங்கிய பிறகு, மேலும் ஏழு பெண் ஊழியர்கள் முன்வந்து, தங்களின் உயர் அதிகாரிகள் தங்களை மனரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், மனிதவளத் துறையில் புகார் அளித்த பிறகும் அவர்கள் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
இந்தச் சம்பவங்கள் பிப்ரவரி 2022 முதல் மார்ச் 2026 வரை நடந்ததாகத் தெரிகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளின் பேரில், மனிதவளத் துறைத் தலைவர் உட்பட ஏழு பேரை காவல்துறை இதுவரை கைது செய்துள்ளது.
இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த நீடா கான் தற்போது மகாராஷ்டிர காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் கூற்றுப்படி, நிடா கான் கடந்த நான்கு நாட்களாக சத்ரபதி சம்பாஜிநகர், நரேகான் பகுதியில் உள்ள கைசர் காலனியில் ஒரு குடியிருப்பில் தனது பெற்றோர், சகோதரர் மற்றும் அத்தையுடன் பதுங்கியிருந்தார்.
இரண்டு நாட்களாக அந்தக் குடியிருப்பைக் கண்காணித்து வந்த நாசிக் சிறப்புப் புலனாய்வுக் குழு, சத்ரபதி சம்பாஜிநகர் காவல் ஆணையரகம் மற்றும் குற்றப்பிரிவு குழுக்கள் இணைந்து நடத்திய நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, இடைக்காலக் காவல் பெற்றார். மேலதிக விசாரணைக்காக அவர் நாசிக்கிற்கு மாற்றப்பட்டார்.