புனேவில் ஆன்லைன் மோசடியில் டாக்டரிடம் ரூ.12 கோடியை சுருட்டிய மர்ம கும்பல்

டாக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது வங்கி பணப் பரிவர்த்தனைகளை வைத்து மோசடி கும்பலை கண்டு பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனேவில் ஆன்லைன் மோசடியில் டாக்டரிடம் ரூ.12 கோடியை சுருட்டிய மர்ம கும்பல்
Published on

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 75 வயது டாக்டர் ஒருவரின் செல்போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ஆன்லைனில் முதலீடு செய்ய பரிந்துரைக்கப்பட்ட பங்குகளின் பட்டியலும் ஒரு இணைப்பும் இருந்தன.

அந்த இணைப்பைக் கிளிக் செய்தபோது, அவர் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டார். அதில், ஒரு உலகளாவிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் என்று தங்களைக் கூறிக்கொண்டு ஆன்லைனில் தாங்கள் சொல்லும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

புகழ்பெற்ற சர்வதேச நிறுவனம் ஒன்றின் பெயரில் போலி வர்த்தகச் செயலியை பதிவிறக்க சொல்லி அதில் அவரது தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களைப் பகிருமாறு தெரிவித்துள்ளனர். இதனை உண்மை என நம்பிய டாக்டர் அவர்கள் சொன்ன பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பல தவணைகளில் மொத்தம் ரூ.12.31 கோடியை அனுப்பி உள்ளார். அவர் மேலும் முதலீடு செய்யத் தயங்கியபோது, அவர்கள் டாக்டரிடம் உங்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்து விடுவோம் என மிரட்டி, தொடர்ந்து பணத்தை அனுப்பும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் டாக்டர் செயலியில் இருந்து பணத்தை எடுக்க முயன்ற போது, அவரை மீண்டும் மிரட்டியுள்ளனர். அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை டாக்டர் உணர்ந்தார்.

இதையடுத்து அவர் சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். டாக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது வங்கி பணப் பரிவர்த்தனைகளை வைத்து மோசடி கும்பலை கண்டு பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com