மும்பை-புனே விரைவுச்சாலை மீண்டும் திறப்பு: கனமழையால் ரெயில் சேவைகள் பாதிப்பு!

நாசிக் மற்றும் திரியம்பகேஷ்வர் இடையே மேகவெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Mumbai-Pune Expressway
Published on

மகாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 'மும்பை-புனே விரைவுச்சாலை இணைப்புச் சாலை', பாதுகாப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து தற்போது மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து சீரமைப்பு:

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள இடிபாடுகள் மற்றும் பாறைகள் முற்றிலும் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

மேலும், கனமழை மற்றும் பனிமூட்டம் காரணமாகக் குறைவான வெளிச்சமே இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரெயில் சேவைகள் ரத்து மற்றும் மாற்றம்:

சாலைப் போக்குவரத்து சீராகியிருந்தாலும், தொடர் மழையால் ரெயில் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வசாய் ரோடு, நாலசோபாரா மற்றும் விரார் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இன்று, போர்பந்தர்-தாதர் எக்ஸ்பிரஸ், வேராவல்-பாந்த்ரா டெர்மினஸ் எக்ஸ்பிரஸ், பாவ்நகர் டெர்மினஸ்-அசன்சோல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, நாளை மறுநாள் அசன்சோல்-பாவ்நகர் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டு, ஜோத்பூர்-ஹடப்சர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்ரீ கங்காநகர்-திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் சூரத்-ஜல்கான்-மன்மத்-புனே வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட்:

மும்பை, தானே, ராய்காட், புனே ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தீவிரக் கனமழைக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாசிக் மற்றும் திரியம்பகேஷ்வர் இடையே மேகவெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனமழை சூழலைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரிய (மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. பால்கர் மற்றும் கொங்கன் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 500 குடிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

மேலும், இந்திராயாணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆலந்தி பகுதிக்கு யாத்திரீகர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com