பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தாய்.. 17 வயது மகன் எடுத்த விபரீத முடிவு

தாய்க்கு நேர்ந்தத்தையும், போலீசார் வழக்குபதியாததையும் கண்டு மனமுடைந்தார்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தாய்.. 17 வயது மகன் எடுத்த விபரீத முடிவு
Published on

மத்தியப் பிரதேசத்தில் தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தாங்க முடியாமல் 17 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தேவாஸ் மாவட்டத்தின் உதயநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிக்குபுரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெண்மணி வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது சுனில் மாளவியா என்ற நபர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும் வெள்ளிக்கிழமை இரவு காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்றனர்.

ஆனால், இது போன்ற வழக்குகளில் பெண் அதிகாரி இருக்க வேண்டும் என்பதால், அங்கு பெண் அதிகாரி இல்லை என்ற காரணத்தை கூறி போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

தாய்க்கு நேர்ந்தத்தையும், போலீசார் நடவடிக்கை எடுக்கத் தாமதப்படுத்துவதையும் கண்டு மனமுடைந்த அந்தப் பெண்ணின் 17 வயது மகன், நேற்று (சனிக்கிழமை) காலை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சிறுவனின் மரணச் செய்தி கேட்டதும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சிறுவனின் உடலைச் சாலையில் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளி சுனில் மாளவியாவின் வீட்டின் மீது கல்வீசித் தாக்கினர். அவனது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர்.

போலீசாரின் மெத்தனப் போக்கே இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டினர்.

பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளி சுனில் மாளவியாவைக் கைது செய்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்யத் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com