என் மலர்
இந்தியா

மடியில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு சசிதரூர் மார்பில் படுத்து உறங்கிய குரங்கு
- சசிதரூர் குரங்குக்கு 2 வாழைப்பழங்களை சாப்பிட கொடுத்தார்.
- குரங்கால் எனக்கு அச்சுறுத்தல் இருக்காது என நம்பி, அதன் செயல்பாடுகளை வரவேற்றேன்.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் நேற்று காலை டெல்லியில் உள்ள தனது வீட்டின் தோட்டத்தில் நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அப்போது குரங்கு ஒன்று அவரை நோக்கி வேகமாக ஓடிவந்தது. சசிதரூர் எந்தவித சலனமும் இன்றி குரங்கு என்ன செய்கிறது என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அந்த குரங்கு சசிதரூரின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டது. இதையடுத்து சசிதரூர் குரங்குக்கு 2 வாழைப்பழங்களை சாப்பிட கொடுத்தார். அவற்றை கையில் வாங்கிய குரங்கு பொறுமையாக சாப்பிட்டது.
குரங்கு தனது மடியில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சசிதரூர் அமைதியாக செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார். வாழைப்பழங்களை சாப்பிட்டு முடித்த பிறகு அந்த குரங்கு, சசிதரூரை கட்டியணைத்து அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்தியது. அதன் பின்னர் சசிதரூரின் மார்பில் படுத்துக்கொண்ட குரங்கு கண்ணை மூடி உறங்கியது. பின்னர் சசிதரூர் மெதுவாக நாற்காலியில் இருந்து எழுந்திருக்க ஆரம்பித்தபோது, குரங்கு அவரது மடியில் இருந்து குதித்து ஓடியது.
மனதுக்கு இதமளிக்கக்கூடிய இந்த காட்சிகள் அனைத்தையும் சசிதரூரின் உதவியாளர்கள் புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படங்கள் அனைத்தையும் சசிதரூர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, இந்த சம்பவம் குறித்த தனது அனுபவத்தை விவரித்தார்.
அந்த பதிவில் அவர், "வனவிலங்குகள் மீதான பயபக்தி எனக்குள் வேரூன்றி இருக்கிறது, குரங்கு கடியால் ரேபிஸ் ஷாட் தேவைப்படும் அபாயம் குறித்து சிறிது கவலைப்பட்டாலும் அமைதியாக இருந்தேன். குரங்கால் எனக்கு அச்சுறுத்தல் இருக்காது என நம்பி, அதன் செயல்பாடுகளை வரவேற்றேன். எனது நம்பிக்கை பலித்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன், எங்கள் சந்திப்பு முற்றிலும் அமைதியாகவும் மென்மையாகவும் இருந்தது" என குறிப்பிட்டுள்ளார். சசிதரூர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதில் நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டனர்.






