

அமெரிக்காவின் தடையில் உள்ள 'பிங் ஷுன்' என்ற கப்பல் 6 லட்சம் பீப்பாய் ஈரானிய கச்சா எண்ணெயுடன் இந்தியாவுக்கு வரவிருந்தது. இந்தக் கப்பல் தனது பாதையை மாற்றி சீனாவை நோக்கிச் செல்லவுள்ளது.
ஆனால், இந்தக் கப்பல் இன்று குஜராத்தின் வாடினார் துறைமுகத்துக்கு வந்தடைய வேண்டியிருந்தது. கப்பல் கண்காணிப்புத் தரவு நிறுவனமான கெப்ளர் அறிக்கையின்படி, இப்போது இந்தக் கப்பல் சீனாவின் டாங்யிங் துறைமுகத்தை நோக்கிச் செல்கிறது. ஈரான் எண்ணெய் விற்பனையாளர்கள் முன்கூட்டியே பணம் செலுத்துமாறு நிபந்தனை விதித்ததே இந்த மாற்றத்திற்குக் காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் கப்பல் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டதாக வந்த செய்தி தவறானது என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இந்தியாவின் வதினார் துறைமுகத்திலிருந்து ஈரானிய கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் ஒன்று சீனாவிற்குத் திருப்பி விடப்பட்டதாக வரும் செய்திகளும் சமூக ஊடகப் பதிவுகளும் உண்மையில் தவறானவை.
மத்திய கிழக்கு நாடுகளில் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியிலும், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ஈரான் உள்பட தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயைப் பெற்றுள்ளன.
மேலும், சில வதந்திகளைப் போல ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதில் எந்தத் தடையும் இல்லை. வரும் மாதங்களுக்கு இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.