ஜூலை 1 முதல் 'விபி ஜி ராம் ஜி' திட்டம் அமல் - நிதிச்சுமை அதிகரிக்கும் என பாஜக ஆளும் மாநிலங்களும் கவலை

மொத்தச் செலவில் 40 சதவீதத்தை ஏற்க வேண்டியிருக்கும்.
ஜூலை 1 முதல் 'விபி ஜி ராம் ஜி' திட்டம் அமல் - நிதிச்சுமை அதிகரிக்கும் என பாஜக ஆளும் மாநிலங்களும் கவலை
Published on

2006 கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் திருத்தங்கள் செய்து அதன் பெயரை விபிஜி ராம் ஜி திட்டம் என மத்திய அரசு மாற்றியது.

இதற்கான மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாகி உள்ளது.

திட்டத்திலிருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கியது அவரின் பெருமையை இருட்டடிப்பு செய்யும் முயற்சி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

செலவு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், கிராமப்புறத் தொழிலாளர்களின் ஊதியச் செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.

ஆனால், புதிய விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ், பெரும்பாலான மாநிலங்கள் மொத்தச் செலவில் 40 சதவீதத்தை ஏற்க வேண்டியிருக்கும்.

எதிர்ப்பு

ஜூலை 1 முதல் இத்திட்டம் அமலுக்கு வர உள்ள நிலையில் ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில அரசுகளே போர்க்கொடி தூக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிய திட்டம் தொடர்பாக மாநில அரசுகளுடன் நடத்தப்படட்ட ஆலோசனையின் பதிவுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சக்ரதர் ​​புத்தா என்ற செயல்பாட்டாளர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த ஆர்டிஐ மனுவிற்கு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அளித்த பதிலில் 13 மாநிலங்கள் திட்டம் தொடர்பான ஆலோசனையில் கூறியவற்றை தொகுத்து வழங்கியுள்ளது.

அதில் குறிப்பாக மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள், புதிய நிதி ஒதுக்கீட்டு மாதிரியை மறுபரிசீலனை செய்யுமாறு மற்ற மாநிலங்களை வலியுறுத்தியுள்ளன.

சுமை

விபிஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் 125 நாள் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை நடைமுறைப்படுத்த பீகாருக்கு ரூ. 15,939 கோடி நிதச் சுமை ஏற்படும்.

மத்தியப் பிரதேசம் அரசு ரூ.20,037 கோடியை செலவிட வேண்டியிருக்கும் என்று அந்த ஆய்வு தெரிவித்தது. ஜார்க்கண்டிற்கு ரூ.9,293 கோடி தேவைப்படும்.

40 சதவீதப் பங்கை மாநில அரசே வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும் என்று ஜார்க்கண்ட் அரசு கூறியுள்ளது.

சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களும், புதிய முறையை மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளன.

கோரிக்கைகள்

பீகார், தினக்கூலியை ரூ.255-லிருந்து ரூ.413 ஆகவும், ஜம்மு காஷ்மீர் ரூ.272-லிருந்து ரூ.311 ஆகவும் உயர்த்தக் கோரியுள்ளன.

ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் அரசுகள், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற வலுயுறுத்தி உள்ளன.

விவசாயப் பணிகள் உச்சத்தில் இருக்கும் காலத்தில் 60 நாட்கள் வேலைவாய்ப்புக்குத் தடை விதிக்கும் திட்டத்திற்கு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட குறைந்தது நான்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும், நிலுவைச் சம்பளம் மற்றும் பொருள் செலவினங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டி, புதிய திட்டத்தின் கீழ் இந்தப் பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com