

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி கடந்த மே 2025 ல் சோனம் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
சோனம், தனது கணவர் ராஜா ரகுவன்ஷியுடன் தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்தார். மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் ராஜா காணாமல் போனார். அவரது உடல் ஜூன் 2 அன்று ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் தனது காதலன் ராஜா குஷ்வாஹா மற்றும் மேலும் மூன்று பேரின் உதவியுடன் சதித்திட்டம் தீட்டி தன் கணவரைக் கொலை செய்ததாக சோனம் ஒப்புக்கொண்டதை அடுத்து காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
சோனம் 10 மாதங்களாக மேகாலயாவின் ஷில்லாங் சிறையில் இருந்து வருகிறார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் முக்கிய குற்றவாளியான சோனம் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். குஷ்வாஹாவும் மேலும் மூவரும் காவலில் உள்ளனர்.
சோனமின் ஜாமீன் மனு தொடர்ச்சியாக மூன்று முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் 4வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஷில்லாங் நீதிமன்றம், ஷில்லாங் மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
கைது நடவடிக்கையின் காவல்துறையால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்த குளறுபடிகளை சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜாமீன் பெற்றதை தொடர்ந்து சோனம் ஷில்லாங் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.