காதலியை குக்கரால் அடித்துக்கொன்ற காதலன்

பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து காதலர்கள் இருவரும் ஒன்றாக தங்கினார்கள். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
காதலியை குக்கரால் அடித்துக்கொன்ற காதலன்
Published on

பெங்களூரு:

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வைஷ்ணவ் (வயது 29). இவருக்கு கல்லூரியில் படிக்கும்போது தேவா (24) என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தனர். கோரமங்களா பகுதியில் உள்ள ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் இருவரும் வேலை பார்த்தனர். பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து காதலர்கள் இருவரும் ஒன்றாக தங்கினார்கள். தாலி கட்டாமல் அவர்கள் கணவன்-மனைவி போல குடும்பம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் தேவா நடத்தையில் வைஷ்ணவ் சந்தேகம் அடைந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

நேற்றும் அவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு உருவானது. ஆத்திரம் அடைந்த வைஷ்ணவ் வீட்டில் இருந்த குக்கரை எடுத்து காதலியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த தேவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறிது நேரம் கழித்து தேவாவின் சகோதரி அவரது செல்போனில் தொடர்பு கொண்டார்.

ஆனால் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தேவாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். உடனே அவரும் வைஷ்ணவ் வீட்டு கதவை தட்டினார். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் இது பற்றி அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தேவா கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

தலைமறைவான வைஷ்ணவை போலீசார் தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com