டோல்கேட்டில் மோதி வெடித்த LPG டேங்கர் லாரி: சிசிடிவி வீடியோ வெளியீடு!

காயமடைந்தவர்கள் பிரயாக்ராஜில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
LPGTankerFire
Published on

உத்திரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிகோரி சுங்கச்சாவடியில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி அதிகாலை சமையல் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட்டில் மோதி, பயங்கரமான சத்தத்துடன் வெடித்து சிதறிய வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், லாரியில் இருந்த ஓட்டுநர்கள் தப்பியோடியுள்ளது தெரியவந்துள்ளது.

விபத்து நடந்தது எப்படி?

கான்பூரில் இருந்து பிரதாப்கர் நோக்கி அதிவேகமாக வந்த எல்பிஜி டேங்கர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதியது. பின்னர், அங்கிருந்த சுங்கச்சாவடி பூத் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.மோதிய அடுத்த சில விநாடிகளில் லாரியிலிருந்து எரிவாயு கசிந்து தீப்பிடித்தது, சுங்கச்சாவடி வளாகமே ஒரு பெரிய தீப்பிழம்பாக மாறியது. இந்த விபத்தில் அங்கிருந்த 16 இருசக்கர வாகனங்களும், 2 கார்களும் முற்றிலும் கருகி சாம்பலாகின.

விபத்து நேர்ந்த உடனேயே, லாரியில் இருந்த இரண்டு ஓட்டுநர்களும் வண்டியை விட்டு இறங்கி, அங்கிருந்து தப்பியோடி உயிர் பிழைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் சிக்கி, அங்கு பணியில் இருந்த 6 சுங்கச்சாவடி ஊழியர்கள் காயமடைந்தனர்.

இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பிரயாக்ராஜில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்யநாராயண் பிரஜாபத் தலைமையிலான காவல்துறையினர், தப்பியோடியவர்களைத் தேடி வருவதுடன், விபத்து குறித்து தொழில்நுட்பக் குழுவினரின் உதவியோடு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com