

தென்னிந்தியாவின் மிகவும் போற்றப்படும் புனித யாத்திரை தலங்களில் கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் நாடு முழுவதிலுமிருந்து அரசியல் தலைவர்கள், திரைப்படப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பக்தர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
குறிப்பாக கர்நாடகா, கேரள, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக இக்கோவில் உள்ளது.
சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய் இக்கோவிலுக்கு வருகை தந்து பிரார்த்தனை செய்து பொதுமக்களின் பெரும் கவனத்தை ஈர்த்தார். இக்கோவிலில் தமிழக முன்னாள் முதல்வர்களான மறைந்த எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் வழிபாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
இவரது வருகை கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
முன்னதாக சிறப்பு விமானம் மூலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைத்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கோவிலுக்குச் சென்றார். இரவு 7.30 மணியளவில் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து, அங்கு சுமார் 30 நிமிடங்கள் செலவிட்டார். மேலும் அவர் வெள்ளை நிற தென்னிந்திய ஆடை அணிந்து சிறப்புப் பூஜைகளில் பங்கேற்றார்.
பாரம்பரிய முறைப்படி சிறப்புப் பூஜை சடங்குகள் நடத்தப்பட்டதாகவும், மும்பையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, சனிக்கிழமை அன்று அம்பானி மேற்கொள்ளவிருந்த கோயில் வருகை ரத்து செய்யப்பட்டதாகவும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.