

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் கடந்த மம்தா ஆட்சியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை அமைக்கப்பட்டது.
கடந்த 2025 டிசம்பரில் மெஸ்ஸி தனது GOAT Tour பயணமாக இந்தியாவிற்கு வந்திருந்த போது, அவரே நேரடியாக இணையவழியில் இந்தச் சிலையைத் திறந்து வைத்தார்
இதனிடையே கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல் முறையாக பாஜக மாநிலத்தில் பொறுப்பேற்றது. சுவேந்து அதிகாரி முதல்வர் ஆனார்.
இந்நிலையில் கடந்த வாரம் மே 25 அன்று கொல்கத்தாவில் வீசிய பலத்த காற்றின் போது லேக் டவுன் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை பாதசாரிகள் கடக்கும் இடத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த இந்த 70 அடி உயர Fiberglass சிலை ஆபத்தான முறையில் ஆடியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்குப் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, மேற்கு வங்க அரசுப் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை ஆய்வு செய்தனர்.
அவர்களின் சமர்ப்பித்த ஆய்வறிக்கையில், சிலையின் அடித்தளம் சரியாக மையப்பகுதியில் அமைக்கப்படவில்லை.
சிலையைப் பிணைத்திருந்த நட்டுகள் மற்றும் போல்ட்டுகள் தளர்வாகக் உள்ளன. கட்டுமானத்தில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளன என கூறப்பட்டிருந்தது.
விரைவில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இந்தச் சிலை எப்போது வேணாலும் சரிந்து விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தலாம் எனப் பொறியாளர்கள் எச்சரித்தனர்.
இதன் காரணமாக, நேற்று காலை முதல் ஹைட்ராலிக் கிரேன் உதவியுடன் சிலையை அகற்றும் பணிகள் தொடங்கின. மாலைக்குள் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது.
இந்தச் சிலையை பழுதுபார்த்து கொல்கத்தாவின் Eco Park போன்ற பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.