பஞ்சாப்பில் அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளி கைது

அம்ரித்பால் சிங்கை தப்பியோடிய குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப்பில் அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளி கைது
Published on

சண்டிகர்:

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங்கை வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்தனர். அவரை மீட்க அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றை ஏந்திய ஆதரவாளர்களுடன் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். இதனால், பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் எழுந்துள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

அம்ரித்பால் சிங்கை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். ஆனாலும் அவர் போலீசில் சிக்காததால், அவர் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே, அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளரான பாப்பல்பிரீத் சிங், ஹோஷியார்பூரில் இருந்து சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி போலீசாரிடம் இருந்து அம்ரித்பால் தப்பியதில் இருந்து பாப்பல்பிரீத் அவருடன் இருந்துள்ளார்.

இந்நிலையில், அம்ரித்பால் சிங்கின் மற்றொரு முக்கிய கூட்டாளியான ஜோகா சிங் என்பவரை சர்ஹிந்த் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர்.

இதனை டி.ஐ.ஜி. எல்லை சரக நரீந்தர் பார்கவ் உறுதி செய்துள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன், அம்ரித்பால் சிங்குடன் ஜோகா சிங் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர்.

கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அம்ரித்பாலுடன் ஜோகா சிங் உதவியாக இருந்து வந்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர். அம்ரித்பாலை கடந்த மார்ச் 27-ம் தேதி பஞ்சாப்புக்கு திரும்ப கொண்டு வந்துவிட உதவியதுடன், நேரடி தொடர்பிலும் இருந்து வந்துள்ளார். அம்ரித்பாலுக்கு தேவையான தங்குமிடம் மற்றும் வாகன வசதிகளையும் அவர் செய்து கொடுத்துள்ளார் என பார்கவ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com