

கேரள மாநிலம் நெடுமங்காடு அருகே உள்ள பனவூர் பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தை சித்ரவதை செய்து கொல்லபட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
கேரள மாநிலம் நெடுமங்காடு அருகே உள்ள பனவூரை சேர்ந்தவர் அகிலா. இவர் கணவன் இறந்துவிட்ட நிலையில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை தனது பராமரிப்பில் பார்த்து வந்துள்ளார்.
மேலும் அகிலா தனது காதலன் அஷ்கர் (34) உடன் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
குழந்தை இறந்தது எப்படி?
கடந்த மே 29 (வெள்ளிக்கிழமை) அன்று வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறி, ஒன்றரை வயதுக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் பரிசோதித்த பின் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, குழந்தையின் மரணம் தற்செயலானது அல்ல என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான காயங்களே குழந்தையின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளன.
குழந்தையின் உடலில் சுமார் 50க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தாய் - காதலன் கைது
இதுதொடர்பாக குழந்தையின் தாய் அகிலா மற்றும் அவரது காதலரான அஷ்கர் (34) ஆகிய இருவரிடமும் நெடுமங்காடு டிஎஸ்பி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குழந்தையின் உடல் பாலோட்டில் உள்ள அவரது சொந்தத் தந்தை அகிலின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உள்ளூர் மக்கள் குமுறல்
குழந்தையின் இறப்பு குறித்து பனவூர் மக்கள் போலீசாரிடம் கூறுகையில், இந்தக் குடும்பம் கடந்த சில மாதங்களாகவே இங்கு வசித்து வருவதாகவும், அண்டை வீட்டாருடன் இவர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், அந்த வீட்டில் இருந்து குழந்தை அடிக்கடி அலறி அழும் சத்தம் கேட்கும் என்றும், குழந்தையின் இரண்டு கைகளிலும் ஏற்கனவே மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது என்றும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கைது நடவடிக்கைக்கு முன்பாக, குழந்தையின் ஆடைகளை எரித்து ஆதாரங்களை அழிக்க இந்தக் தம்பதி முயன்றதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தந்தைவழி உறவினர்கள் கூறுகையில், குழந்தைக்கு நீண்ட நாட்களாகவே அங்குச் சித்திரவதை நடந்து வந்ததாகவும், இதுகுறித்து தாங்கள் ஏற்கனவே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ஆதங்கம்
இந்தக் சம்பவம் குறித்து கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த மே 29 அன்று ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த இதயத்தையும் நொறுக்குவதாக அமைந்துள்ளது.
பெற்ற தாயும், வளர்ப்புத் தந்தையும் சேர்ந்து அந்தக் குழந்தையை மிருகத்தனமாகக் கையாண்டுள்ளனர். குழந்தையின் உடலில் 50-க்கும் மேற்பட்ட காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இது ஒட்டுமொத்த மாநிலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட பெருங் குற்றமாகும். இதுபோன்ற கொடுமைகளில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்." என்று தெரிவித்துள்ளார்.