என் மலர்
இந்தியா

"கேரளா டூ கேரளம்" பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவையில் விரைவில் ஒப்புதல்?
- வரலாற்று அடையாளத்தையும் சிறப்பாக பிரதிபலிக்கிறது.
- இது மாநிலத்தின் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகிறது.
கேரளாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக "கேரளம்" என்று மாற்றுவதற்கான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரம்பரிய மலையாளப் பெயரை முறைப்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றம் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியது. இந்த நிலையில், வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக முதலில் 2023 இல் தீர்மானத்தை நிறைவேற்றி பின்னர் ஜூன் 2024 இல் அதை புதுப்பித்து, 'கேரளம்' மாநிலத்தின் மொழியியல் பாரம்பரியத்தையும், வரலாற்று அடையாளத்தையும் சிறப்பாக பிரதிபலிக்கிறது என்று வாதிட்டது.
கடந்த மாதம், கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு எழுதிய கடிதத்தில், மாநிலத்தை `கேரளம்' என்று மறுபெயரிடுவதற்கான மாநில அரசின் நடவடிக்கையை ஆதரித்தார். மேலும் அந்த கடிதத்தில்," மாநிலத்தின் அசல் பெயர் `கேரளம்' என்றும், ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக அதை கேரளா என்று மாற்றியதாகவும். அவர்களால் செய்யப்பட்ட மாற்றங்கள் சரிசெய்யப்பட்டு உண்மையான பெயர் மீட்டெடுக்கப்படுகிறது. இது மாநிலத்தின் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகிறது," என்று கேரள முதல்வர் கூறினார்.
அதிகாரப்பூர்வ பதிவுகளில் கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை முடிவு அங்கீகரிக்கப்பட்டால், ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்குத் தேவையான அரசியலமைப்பு செயல்முறைத் தொடங்கும், இதில் பிரிவு 3 இன் கீழ் திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் புதுப்பிப்புகள் உள்ளிட்டவை அடங்கும். முன்மொழியப்பட்ட மாற்றம் குறியீட்டு இயல்புடையது. இதனால் நிர்வாக கட்டமைப்புகள், நிர்வாக வழிமுறைகள் மற்றும் பிராந்திய எல்லைகள் எதுவும் மாறாது.






