50 ஆண்டுகளில் முதல் முறை.. எங்கும் இடதுசாரி ஆட்சி இல்லாத நாடானது இந்தியா

நாடு முழுவதுமே கம்யூனிசத்திலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது என மோடி பேச்சு
50 ஆண்டுகளில் முதல் முறை.. எங்கும் இடதுசாரி ஆட்சி இல்லாத நாடானது இந்தியா
Published on

கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மொத்தம் உள்ள 140 இடங்களில் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சி அமைக்க 71 இடங்கள் தேவைப்படும் நிலையில் 91 என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் யுடிஎப் ஆட்சி அமைக்கிறது.

2016, 2021 தேர்தல்களில் வென்று 10 ஆண்டுகள் அங்கு ஆட்சி செலுத்திய பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி கூட்டணி நடப்பு தேர்தலில் 35 இடங்களில் வென்று எதிர்க்கட்சி ஆகியுள்ளது.

இதன் மூலம், கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவிலுள்ள எந்தவொரு மாநிலத்திலும் இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

1957-ல் கேரளாவில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் உலகின் முதல் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு அமைந்தது.

மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2011 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சி செய்தனர். இதில் ஜோதி பாசு மட்டும் 23 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்.

மாணிக் சர்க்கார் தலைமையில் 1993 முதல் 2018 வரை திரிபுராவில் இடதுசாரிகள் அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர்.

1996-ல் ஜோதி பாசு பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது கட்சி அதனை நிராகரித்தது. இதனை அவர் பின்னர் "வரலாற்றுத் தவறு" என்று குறிப்பிட்டார்.

2008 சமயத்தில் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தனர்.

2011ல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடமும், 2018ல் திரிபுராவில் பாஜகவிடமும் இடதுசாரிகள் ஆட்சியை இழந்தனர்.

தற்போது கேரளாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால், இந்திய வரைபடத்தில் இடதுசாரி ஆட்சி என்பது தற்காலிகமாக மறைந்துள்ளது.

இதற்கிடையே நேற்று டெல்லி பாஜக தலைமையகத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடு முழுவதுமே கம்யூனிசத்திலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும் இத்தருணத்தில், காங்கிரஸ் கட்சியோ அதே சித்தாந்தத்தைத் தழுவுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

தேசம் ஏற்கனவே நிராகரித்துவிட்ட ஒரு சித்தாந்தத்தைத் தத்தெடுக்க காங்கிரஸ் இப்போதும் முயன்று கொண்டிருக்கிறது.

காடுகளுக்குள் மறைந்துவரும் மாவோயிசம், தற்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தனது காலூன்றலை வலுப்படுத்திக்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியானது 'நகர்ப்புற நக்சல்களின்' ஒரு கும்பலாக உருவெடுத்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது, மக்கள் எந்த சித்தாந்தத்தை நிராகரித்தார்களோ, அதே சித்தாந்தத்தைத் தழுவும் எவரையும் பொதுமக்களும் நிராகரிப்பார்கள்," என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com