

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 18 கிலோ அளவிலான கலப்பின கஞ்சாவை எர்ணாகுளம் காவல்துறையினர் கைப்பற்றினர்.
கேரள அரசு ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற திட்டத்தின் மூலம் போதைப்பொருள் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் மரம்பள்ளியின் குன்னுவழி பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆயுஷ் என்பவரை சோதனை செய்த போலீசார், ஒரு பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1.16 கிலோ கலப்பின கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெரும்பாவூரில் உள்ள அவரின் இல்லத்தில் இருந்து கூடுதலாக 16.5 கிலோ அளவிலான போதைப்பொருளை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ஆயுஷ் மற்றும் அவரின் மனைவி அனிகா இருவரையும் எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து எர்ணாகுளம் சரக டிஐஜி யதீஷ் சந்திரா கூறுகையில், “உயர்தர கலப்பின கஞ்சா பொருட்கள் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது.
இவர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய நபர்களை அடையாளம் கண்டு, பல்வேறு தடயங்களை ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறினார்.
இந்த வகை போதைப்பொருட்கள் தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.