

கேரளாவில் ஏப்ரல் 13-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேசிய தலைவர்கள் கேரளாவில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி பத்தனம்திட்டாவில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-
நான் பேச்சை தொடங்கியபோது இந்த மைக்கை உற்று நோக்கினேன். அதில் சீனாவில் தயாரிக்கப்பட்டது (Made In China) என்று எழுதப்பட்டிருந்தது. இந்த மைக்கில் ஏன் இந்தியாவில் தயாரானது என்றோ அல்லது கேரளாவில் தயாரானது என்றோ எழுதப்படவில்லை?.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஏதும் நம்மிடம் இல்லையென்றால், கேரள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?. மேலும், வெறும் ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்கள் மட்டுமே கேரளத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தால், கேரளத்திலேயே பொருட்களைத் தயாரிப்பது என்பது நமக்கு எப்படித்தான் சாத்தியமாகும்?.
உங்கள் முதலமைச்சரும் (பினராயி விஜயன், பிரதமரும் (நரேந்திர மோடி) இணைந்து, இந்த நாட்டையே அதானி மற்றும் அம்பானி ஆகியோரிடம் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.