search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
    X

    கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

    • குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தனர்.
    • ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான ஜான் யொகோவாவின் சாட்சிகள் சபையில் 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் களமச்சேரியில் நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பெண்கள் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

    அவர்களில் 12 வயது சிறுமி உள்பட மேலும் 3 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சி பகுதியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டு வெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய டொமினிக் மார்ட்டினை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அதில் யெகோவாவின் சாட்சிகள் சிறிஸ்தவ சபையின் நடவடிக்கை பிடிக்காததால், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அந்த அமைப்பு நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதும், டொமினிக் மார்ட்டின் மட்டுமே குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இந்தநிலையில் இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தனர். அவர்களில் தொடுபுழா அருகே உள்ள கொடிகுளம் வண்டமட்டத்தை சேர்ந்த ஜான் (வயது76) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான இவர், யொகோவாவின் சாட்சிகள் சபையில் 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில் தான், களமச்சேரி குண்டு வெடிப்பில் சிக்கினார். 55 சதவீதம் தீக்காயம் அடைந்திருந்த அவர், ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ஜான் இறந்ததை தொடர்ந்து, களமச்சேரி குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×