

அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.
இங்கு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் தனது பலத்தை காட்ட கோதாவில் உள்ளது. இங்கு பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 883 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் பினராயியில் உள்ள ஆர்சி அமலா பள்ளியில் வாக்களித்தார்.
கேரள பாஜக தலைவரும், நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி குருவாயூர் தெற்கு தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
திருவனந்தபுரம் முடவன்முகலில் உள்ள வாக்குச்சாவடியில் நேமம் தொகுதியின் அமைச்சரும் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருமான வி.சிவன்குட்டி மற்றும் நடிகர் மோகன்லால் வாக்களித்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவரும், பேராவூர் வேட்பாளருமான சன்னி ஜோசப் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
கொச்சியில் உள்ள எஸ்என்டிபி நர்சரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் வாக்களித்தார்.