கேரளம் மாநில சட்டசபை தேர்தல்: 30,495 வாக்குச்சாவடிகளில் நாளை ஓட்டுப்பதிவு

ஓட்டுபதிவு நடைபெற உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கேரளம் மாநில சட்டசபை தேர்தல்: 30,495 வாக்குச்சாவடிகளில் நாளை ஓட்டுப்பதிவு
Published on

கேரளம் மாநில சட்டசபைக்கான பதவிக்காலம் வருகிற மே மாதம் 23-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய சட்டசபைக்கான தேர்தல் நாளை (9-ந்தேதி) நடைபெறுகிறது.

கேரளம் மாநிலத்தில் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ந்தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற்றது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் என அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 890 பேர் போட்டியிடுகின்றனர்.

கேரளம் மாநில தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி ஆகியவை களத்தில் உள்ளன.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தநிலையில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை (9-ந்தேதி) நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 30,495 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஓட்டுபதிவு நடைபெற உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது. ஓட்டுப்பதிவு வெப் கேமராக்கள் மூலமாக முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன.

மாநிலத்தில் மொத்தம் 2 கோடியே 71லட்சத்து 96 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் நாளை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். முதன்முறையாக வாக்களிக்க வரக்கூடிய இளம் வாக்காளர்களை வரவேற்கும் வகையில், அவர்களுக்கு “அல்வா” வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 28,209 சிறப்பு போலீஸ் படையினர் உள்பட 76,203 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் 140 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 20 கம்பெனி போலீசாரும் கேரளம் மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com