என் மலர்
இந்தியா

ஆட்சியில் இருந்தபோது பங்களாவை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவிட்டார் கெஜ்ரிவால் - பாஜக
- அதிக செலவழித்து ஆடம்பரமாக மாற்றி வாழ்ந்தார் என்று பாஜக தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தது.
- மார்ச் 31, 2015 முதல் டிசம்பர் 27, 2022 வரை அரவிந்த் கெஜ்ரிவால் மொத்தம் 29.56 கோடி ரூபாய் செலவிட்டார்.
கடந்த நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 10 வருடமாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. ரேகா குப்தா டெல்லி முதல்வர் ஆனார். ஆம் ஆத்மி தோல்விக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறை சென்றது ஒரு காரணம்.
இரண்டாவதாக பாஜகவால் முன்னெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஷீஷ்மகால் பிரசாரம். அதாவது, கெஜ்ரிவால் பதவியில் இருந்தபோது முதல்வர் இல்லத்தை, அதிக செலவழித்து ஆடம்பரமாக மாற்றி வாழ்ந்தார் என்று பாஜக தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தது.
தங்கத்தில் கழிவறை இருந்ததாகவும் பாஜக கூறியது. இதுதொடர்பாக சிஏஜி அறிக்கை கசிந்ததாகவும் கூறியது. மேலும் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் 2015 முதல் 2022 வரை முதல்வரின் பங்களாவைப் பராமரிக்க கெஜ்ரிவால் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் செலவிட்டார் என்று பாஜக தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலைச் சுட்டிக்காட்டி, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது, ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முதல்வரின் பங்களாவை பராமரிக்க மார்ச் 31, 2015 முதல் டிசம்பர் 27, 2022 வரை அரவிந்த் கெஜ்ரிவால் மொத்தம் 29.56 கோடி ரூபாய் செலவிட்டார்.
பங்களாவைப் பராமரிக்க ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை விசாரிக்க டெல்லி அரசிடம் கேட்போம்" என்றார்.






