

கர்நாடக மாநிலம், தெற்கு பெங்களூவின் மடபட்டணா கிராமத்தில் உள்ள ‘காவேரி ஜெல்லி கிரஷர்’ என்ற தனியார் கல்குவாரியில் இன்று நடந்த எதிர்பாரா விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காலைநேரத்தில், தொழிலாளர்கள் வழக்கமான கல் குவாரிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காலை 7.30 மணியளவில் குவாரியின் மேல் இருந்த பெரிய பாறாங்கல் ஒன்று டிராக்டரின் உதவியுடன் நகர்த்தப்பட்டுள்ளது. அப்போது அந்த பாறாங்கல் சரிந்து கீழே வேலைப்பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது. சுமார் 40 அடி உயரத்திலிருந்து கல் விழுந்துள்ளது.
கல் விழுந்த இடத்தில் ஏறத்தாழ 18 பேர் இருந்தநிலையில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தீயணைப்பு மற்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குவாரியில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா அல்லது அலட்சியம் காரணமாக இந்த விபத்து நடந்ததா என தாவரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக கல்குவாரியின் உரிமையாளர் ஆனந்தசுவாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் கலபுரகி மற்றும் யாத்கிர் மாவட்டங்களைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிலாளர்கள் அங்கு தற்காலிக கூடாரம் ஒன்றை அமைத்து தங்கி வேலைபார்த்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும், துணை முதலமைச்சர் பரமேஸ்வராவும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.