

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் உள்ள நிம்ப மரதஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருக்கு 17 வயது மகள் இருந்தார். மகளுக்கு 18 வயது ஆன பிறகு மனைவியின் உறவினருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.
மனைவியின் உறவினர் வீட்டில் திருமணத்திற்கான துணிகள் மற்றும் தாலி உள்ளிட்டவைகளை வாங்கி திருமணத்திற்கு தயாராக இருந்ததாக தெரிகிறது. ஆனால் திம்மராயப்பாவுக்கு மனைவியின் உறவினருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை. இது தொடர்பாக கடந்த 5 மாதங்களாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மகளை கொலை செய்ய முடிவு செய்தார் திம்மராயப்பா.
கடந்த மாதம் 16-ந்தேதி மகளை கிணறு அருகே அழைத்துச் சென்று, வலுக்கட்டாயமாக கிணற்றில் தள்ளி விட்டுள்ளார். கிணற்றில் விழுந்த மகள், தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சிய நிலையிலும், மகள் என்று கூட பார்க்காமல் கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர் திம்மராயப்பா தனது மகள் உடலை வெளியே எடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று புதைத்துள்ளார். அதன்பிறகு எதுவுமே நடக்காதமாதிரி சகஜமாக வீட்டில் இருந்துள்ளார். கூலி வேலைக்கு சென்றிருந்து திம்மராயப்பா மனைவி, மாலை 6.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் மகள் இல்லாததால், பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். எல்லா இடங்களிலும் தேடி மகள் கிடைக்கவில்லை. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக திம்மராயப்பாவும் உடன் சென்றுள்ளார்.
பின்னர் போலீசாருக்கு திம்மராயப்பா மீது சந்தேகம் வர, அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது மகளை கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மனைவியின் உறவினருக்கு மகளை திருமணம் செய்து கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், மகளை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.