

கணவனை விட மனைவி அதிக சம்பளம் வாங்கி தற்சார்புடையவராக இருக்கும்பட்சத்தில் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க கணவனுக்கு உத்தரவிட முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு திருமணமான ஒரு தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்து வாழத் தொடங்கியுள்ளனர்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, கணவனின் மாதச் வருமானம் ரூ.60,646 ஆகவும், மனைவியின் மாத வருமானம் தோராயமாக ரூ.1 லட்சம் ஆகவும் உள்ளது.
கணவனை விட அதிக வருமானம் இருந்தபோதிலும், தனக்கு ஜீவனாம்சம் கோரி மனைவி கீழ் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், கணவன் தன் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.20,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து கணவன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சுமலதா முன் விசாரணைக்கு வந்தது.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதி,
"சொந்தமாக வருமானம் இல்லாத அல்லது வாழ்வாதாரத்திற்கு வழியில்லாத ஒரு இணையருக்கு பொருளாதார ஆதரவு வழங்குவதே ஜீவனாம்ச சட்டத்தின் உண்மையான நோக்கமாகும்.
எப்போதுமே மனைவியைப் பராமரிப்பது கணவனின் கடமை என்ற பொதுப் புத்தியின் அடிப்படையில் மட்டும் நீதிமன்றங்கள் ஜீவனாம்சம் வழங்கக் கூடாது.
திருமண வாழ்க்கையின் போது இருந்த அதே வாழ்க்கைத் தரத்துடன் பிரிந்து வாழும்போதும் வாழ, மனைவியிடம் போதிய வருமானம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஜீவனாம்சம் அனுமதிக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கில், மனைவி பொருளாதார ரீதியாக முழுப் பாதுகாப்பைக் கொண்டிருப்பதோடு, கணவனை விட அதிகச் சம்பளம் பெறுகிறார்.
மேலும், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்போ அல்லது பிறரைச் சார்ந்திருக்கும் குடும்பப் பொறுப்புகளோ அவருக்கு இல்லை.
இத்தகைய சூழலில், குறைந்த வருமானம் ஈட்டும் கணவனை ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது சட்டப்பூர்வமாக நியாயமற்றது" என்று கூறி, மாதம் ரூ.20,000 வழங்க வேண்டும் என்ற கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.