

கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.
வெற்றிக்கு இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளதாலும், இருவரும் தங்களுக்கென தனி செல்வாக்கு கொண்டுள்ளதாலும் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் போட்டி நிலவியது.
ஆட்சியின் முதல் பாதி சித்தராமையா, இரண்டாம் பாதி சிவகுமார் முதல்வராக இருக்கட்டும் என காங்கிரஸ் தலைமை சமரசம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஆட்சியின் முதல் பாதி முடிந்தபோதும் சித்தராமையா தனது நாற்காலியை விட்டுத் தர தயங்கியதால் சிவகுமார் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். விவகாரம் பல மாதங்களான டெல்லியில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக முதலமைச்சர் பதவியிலிருந்து விலக சித்தராமையா சம்மதித்தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற காலை உணவு கூட்டத்தின் போது, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், முதலமைச்சர் சித்தராமையாவை கட்டியணைத்து பின் கால்களைத் தொட்டு வணங்கியுள்ளார்.
மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட இந்த காலை உணவு கூட்டத்தில் பங்கேற்றனர்.
இது அதிகாரப் பகிர்வு சுமுகமாக நடப்பதைக் குறிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். சித்தராமையா தனது ராஜினாமா முடிவை இன்று அறிவிக்கலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக முதலமைச்சர் சித்தராமையா மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டைச் சந்திக்க அனுமதி கோரியிருந்தார். இன்று பிற்பகலில் அவர் ஆளுநரை நேரில் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், குடும்ப விவகாரம் காரணமாக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் தற்போது பெங்களூருவில் இல்லை என்றும், அவர் இந்தூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்றும் ராஜ் பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் ராஜினாமா சமர்ப்பிப்பதில் தற்காலிகத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், சித்தராமையாவுக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி ஆகியவற்றை வழங்க காங்கிரஸ் மேலிடம் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், சித்தராமையாவுக்கு மாநிலங்களவைக்குச் செல்வதில் விருப்பமில்லை என்றும், அவர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கவே விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.