JEE-ல் தோல்வி- இப்போ இஸ்ரோ விஞ்ஞானி!- நீட் தேர்வாளர்களுக்கு சொல்லும் மெசேஜ்

தேர்வின் மதிப்பெண்கள் உங்களை மதிப்பிடுவதில்லை, உங்களுக்கான மேடையை தயார் செய்யுங்கள்.
ISRO
ISRO ISRO
Published on

மீரட்டை சேர்ந்த 23 வயதான சங்கத் குமார் என்பவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானி- பொறியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக 2021-ல், வெறும் இரண்டு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் JEE அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெறும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

இந்நிலையில் அடுத்த தேர்விற்காக ஒரு வருடம் இடைவெளி எடுக்க வேண்டாம் என்று பலரும்அறிவுறுத்திய போதிலும், அவர் தனது படிப்பைத் தொடர முடிவு செய்தார்.

மேலும் குறிப்பாக எந்தப் பயிற்சி நிறுவனத்திலும் சேராமல், சுய படிப்பு, யூடியூப் விரிவுரைகள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள் மூலம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் 2022-ல் அவர் JEE Main மற்றும் JEE Advanced ஆகிய இரண்டு தேர்வுகளிலும் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்வெளிப் பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற்றார்.

ஐஐஎஸ்டி-யில், பல மாணவர்களும் உந்துவிசை மற்றும் காற்றியக்கவியல் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்தபோது, ​​சங்கத் மட்டும் அதிர்வுகள் மற்றும் ஒலியியலைத் தேர்ந்தெடுத்தார். இந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுத்த ஒரே மாணவர் இவர்தான்.

மேலும் இந்தப் படிப்பின் போது, ​​ஜப்பானை தளமாகக் கொண்ட ஷின்ரா இன்க் நிறுவனத்தால் ஒரு மேம்பட்ட பொறியியல் ஆராய்ச்சித் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர் மூன்று மாதங்கள் பணியாற்றினார். ஐஐஎஸ்டி-யில் 8.2 சிஜிபிஏ பெற்ற பிறகு, அவர் இஸ்ரோ நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் தனது முதல் பணியை மேற்கொண்டார். இங்கு ஏவுதலுக்கு முன் ராக்கெட் அமைப்புகளின் இறுதிச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று சம்பத் எப்போதும் கூறிவருவார். மேலும் அவரது கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி தந்தது என்று அவரது குடும்பம் மற்றும் நட்பு வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இன்று இந்திய அளவில் நீட் மறு-தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்கள் அனைவரும் துணிவுடனும் தெளிவுடனும் இத்தேர்வை எதிர்கொள்ள வாழ்த்துகள்.

வெற்றி தோல்வி குறித்து கவலைகளை விடுத்து, மனம் தளராமல் அடுத்து என்ன? என்று நம் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு தயாராகுவோம்.

தமது கனவுகள் உறுதியாக இருந்தால், காலமும் களமும் ஒரு பொருட்டல்ல. கடின உழைப்போடு சாமர்த்தியமான படிப்புத்திறனை மேம்படுத்தி வழக்கையின் ஒவ்வொரு கடினத்தையும் படிகளாக மாற்றி வெற்றி நடைபோடுவோம்.

வெற்றி நமதே!

X

Maalai Malar
www.maalaimalar.com