

இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடைவிதித்துள்ளது. தரக்கட்டுப்பாட்டு குறைபாடுகள் காரணமாக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடைவிதித்துள்ளது.
ஒவ்வொரு ஏற்றுமதி காலத்திற்கும் முன்பும் ஜப்பான் அதிகாரிகள் இந்தியா வந்து மாம்பழங்களை ஆய்வு செய்கின்றனர். அந்தவகையில், இந்தாண்டு உத்தரப் பிரதேசத்தின் ரஹ்மான்பூரில் மார்ச் மாதம் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இந்த ஆய்வின்போது, ஜப்பானிய குழுவினர் புகைமூட்டம் மற்றும் கிருமிநீக்கம் செய்யும் நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து ஆய்வை முடித்துக்கொண்டு சென்ற குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மார்ச் 25 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு மாம்பழ இறக்குமதி ஏற்றுக்கொள்ளப்படாது என்று, யோகோஹாமா தாவரப் பாதுகாப்புச் சங்கம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதியை ஜப்பான் நிறுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக, இதேபோன்ற பழ ஈக்கள் அச்சுறுத்தல் காரணமாக 1986 ஆம் ஆண்டில் இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்திருந்தது. அதன்பின் இந்தியா தனது தொழில்நுட்ப முறைகளை மேம்படுத்தியதால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2006 இல் அந்தத் தடை நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் 20 ஆண்டுகள் கழித்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் நிலவும் கடுமையான வெப்ப அலைகளால் ஏற்கனவே மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜப்பானின் இந்தத் தடை இந்திய மாம்பழ ஏற்றுமதியாளர்களுக்குக் கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய மாம்பழ உற்பத்தியாளரான இந்தியா ஆண்டுக்கு சுமார் 26 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது. நமது மாம்பழ விளைச்சலில் பெரும்பகுதியை நாமே பயன்படுத்துவதால், உற்பத்தியில் 1 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்திய மாம்பழங்கள் பொதுவாக ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இங்கிலாந்து, குவைத், கத்தார் மற்றும் ஜப்பான் போன்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.